பல கதவுகளைத் திறந்து
விடுகிறது இந்த வாழ்க்கை, நுழைந்து
பயணிக்கத்தான் நாம் தயாரில்லை.
மூடிக் கொள்கிறோம் நாம்.... நமக்குள்ளே!
இளமையிலே நாம் சந்திக்கும்
மனிதர்கள்
பாறையில் வெட்டப்பட்ட
கல் எழுத்தாய் மனதிலே பதிந்து போகிறார்கள். அப்படித்தான் நிறைய
நடந்திருக்கிறது. என் வசந்த வாழ்க்கையில். திரும்பிப் பார்க்கவே... திகைப்பாக இருக்கிறது.
சொல்லாமலேயே
வந்து நில்லாமலேயே
சென்றுவிடுகிற மழைக் காலப்
பொழுதுகளைப் போல, நிலாப் பார்க்க
வானை உற்று
நோக்கிக் கொண்டிருந்தபோது என் வானில் யார்
யாரோ வாணவேடிக்கை
நடத்திவிட்டுப் போயிருக்கிறார்கள்.
அவர்களின்
உயரம் என்ன? என்பதை உணராமலேயே
அவர்களோடு
உடனிருந்திருக்கிறேன், உடன் உண்டிருக்கிறேன், உணர்வோடு உரை
பகிர்ந்திருக்கிறேன், உற்றுக்
கவனித்திருக்கிறேன், உள்ளுணர்வற்று
உலவியிருக்கிறேன்.
பின்னரவின்
பிசுபிசுத்த
நிசப்தத்தை
நோயின் கோரத்திலிருக்கும்
பக்கத்துவீட்டுக்காரனின்
இருமல் இடையறாது குலைத்துப்
போடுகிற
மாதிரி, சக மனிதர்களால் நாம் குலைத்துப் போடப்பட்டிருக்கிறோம். பழுக்க வைக்கப்பட்டுச் சம்மட்டியால் அடிக்கப்பட்டு அறிவுவாளாக்கப் பட்டிருக்கிறோம்.
மாதிரி, சக மனிதர்களால் நாம் குலைத்துப் போடப்பட்டிருக்கிறோம். பழுக்க வைக்கப்பட்டுச் சம்மட்டியால் அடிக்கப்பட்டு அறிவுவாளாக்கப் பட்டிருக்கிறோம்.
பனிக்கட்டியாக இறுக்கப்பட்டிருக்கிறோம்,
முட்களின்
முனை ஒடிக்கப்பட்ட ரோசாக்களாய் மணம் பரப்பப்பட்டிருக்கிறோம்.
அதில்
பேதம் ஏதுமில்லை, வேதம் படித்து தாத்தாவின் தெவசத்திற்கு வந்து போன ராமகிருஷ்ணவாத்தியார் முதல் மூங்கில் கூடையோடு
மோர் விற்க
வரும் திம்மராஜபுரம் கிருஷ்ணம்மா அக்கா வரை அத்தனைபேரும் அடக்கம். மருத்துவரின் கத்தி, என் கட்டியைக்
கிழிக்கும் போதுதான் என் வலிமை எனக்குத்
தெரிய வரும்.
'நான் பேசநினைத்த யாவற்றையும்
பேசிவிடவுமில்லை
பேசக்கூடாத ஒரு சிலவற்றைப்
பேசாமலிருக்கவுமில்லை..
ஆனாலும்
என் மவுன வெளிகளில்
இன்னும் சில சொற்கள்
செலவிடப்படாமல்
மிச்சமிருக்கின்றன'
அந்தப் பதிவுகள் என் காலடித் தடங்களின் ஈரப்பதிவுகளாய் அமையலாம். கிழிக்கப்பட்ட கருவேலமுள்ளால் வடிந்த குருதியின் கறைகள் காலில் இருக்கலாம். பதிவது மட்டுமே என் வேலை, நெஞ்சில் பதிவதும் பொழுதுபோக்காய் விடுவதும் வாசகரின் வேலை.
சந்தைக்குச் சென்று
விட்டு திரும்பிக் கொண்டிருந்த இளம்
காலைவேளையில் எங்கள்
பாண்டிய வேளாளர்
தெருவின் உச்சினிமாகாளி அம்மன்
கோயிலருகே அதிர்ச்சி காத்திருந்தது...
சமச்சீர் கல்வியின் சுதந்திரத்தால் பள்ளிக்
குழந்தைகள், யாவற்றையும் விட்டு, விட்டு விடுதலையாகித் தொட்டுப்
பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அந்தக் காலை
அவர்களால் கலைமிக்கதாய் மாறிக்கொண்டிருந்தது அதில்
மாற்றுத் திறனாளியாய் சற்று
மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு
ஏழுவயதுச் சிறுவன்.
வயதிற்கு வரும்
முன்பே அச்சிறுவர்களில் சில
பேர், வக்கிரங்கள் வயதிற்கு
வந்துவிட்டதைப் போன்று
நடந்து கொண்டார்கள்.
தகர டப்பாவைக்
கயிற்றில் கட்டி அச்சிறுவனின் கால்சட்டையில் முடிச்சிட்டுத் துரத்திவிட்டனர் அச்சிறுவர்கள்.
சப்தம்
ஏற்படுத்திய அலறலின் பேயொலி
தாங்க முடியாமல்
கலக்கத்துடன் கதறல் ஒலியோடு
அங்குமிங்கும் ஓடியது அக்குழந்தைக் குருத்து.
அஞ்சலிப்
படக் காட்சி
அஞ்சடிக்கு முன் அரங்கேறியதன் அதிர்ச்சியில் நான்.
அக்குழந்தையின் அலறல் அவனது தாயை
எப்படி உலுக்கியதோ
தெரியவில்லை. கொலைவெறியோடு ஓடிவந்தவள் சத்தமிட்டுக் கேலிசெய்த
குழந்தைகளை விரட்டியபடி அடிக்கப்
பாய்ந்தாள்.
சம்பந்தன்
அழுகைக்குரல் சக்திக்குக் கேட்கத்தானே
செய்யும்? அன்புக் கிண்ணமேந்தி
அழுகையை நிறுத்த
அவள் வரத்தானே
செய்வாள். வந்தாள். அணைத்தபடி
தன் மகனை
அழைத்துச் சென்றாள்.
உற்றுப்
பார்த்தேன் உச்சினிமகாளியும் அவ்வினாடியில் இன்னும் உக்கிரமாயிருந்தாள்.
இது போல் சொல்ல
இன்னும் உண்டு.
காலம் நசுக்கிப்
போட்ட பற்பசைக்
குழாய்களாய் நாம் மாறும்
முன்பு சொல்லியாக
வேண்டும் சொல்லாத
பலவற்றை.

No comments:
Post a Comment