Wednesday, June 11, 2014

சிறகு


காலம் கவனித்துக் கொண்டே இருக்கிறது யாவற்றையும்.

கரி நாட்களுக்கு மேலும் கையில் வேலோடு “யாமிருக்க பயமேன்” என்று சிரிக்க முடிகிறது காலண்டர் முருகர்களால்.பாளை.அருங்காட்சியகத்திற்கு அருகே பத்து ரூபாய்க்குக் கலர்க்கோழிக் குஞ்சுகளை அட்டைஅரணிட்டு விற்க முடிகிறது.

ஜான்ஸ் கல்லூரிக்கு அருகில் சாலையோரத்தில் பூச்செடிகளை விற்கும் உயர மனிதர் இரவுப் பொழுதுகளில் அப்பூச்செடிகளுக்கு மத்தியில் எந்தக் கவலையும் இன்றி உறங்க முடிகிறது.


பத்தடி உயரப் பிள்ளையார் பொம்மை செய்து வைத்து விற்காததால் அடுத்த பிள்ளையார் சதுர்த்தி வரை சாக்கு சுற்றி வைத்து திருச்செந்தூர் சாலையோரத்தில் ஒரு வருடம் காத்திருக்க முடிகிறது.


விற்காமல் போனாலும் கவலை இன்றி ஹெல்மெட் வியாபாரியால் வண்ணார்பேட்டை சூரியன் பண்பலை முன்பு சாலைஓரத்தில் தூங்க முடிகிறது.ப்ளெக்ஸ்களினால் நசிந்துபோய் விட்டாலும் வேதவசனங்கள் எழுதியோ நாளைய நம்பிக்கை என்று அழகாக எழுதியோ பிழைக்கும் அந்த தாடிவைத்த ஆர்டிஸ்ட்டால் தன் கைகளை நம்பி வாழமுடிகிறது.

பறக்க முடிவு செய்தவனுக்குச் சிந்தனையில்கூட சிறகு முளைக்கும்.இருப்பதைக் கொண்டு சிறப்பாய் வாழ முடிகிறது வெறுப்பில்லா வெற்றி 

மனிதர்களாய்.தடம் போட்டவர்களைவிடத் தடம் பதித்தவர்களை வரலாறு என்றும் வரவுவைத்துக்கொண்டுள்ளது

No comments:

Post a Comment