Saturday, June 14, 2014

கும்பகோணம் தாராசுரம் திருக்கோவில்



அந்த நாளில் அவ்வளவு அருமையான சொல்பேசும் கற்களோடு..அல்ல..அல்ல..கற்காவியங்களோடு கழிப்பேன் என நான் நினைக்கவில்லை.

அன்று மாசிமகம் இஸ்லாமியத் தமிழ்இலக்கிய மாநாடு சென்ற அந்த மாலைப்பொழுதில் சற்றும் எதிர்பாரா வகையில் தாராபுரம் போனேன்.

கும்பகோணத்திலிருந்து சிற்றுந்தில் கிளம்பியபோது பட்டீஸ்வரம் போய்வருவதாகத்தான் திட்டம் அன்றிரவே ‘ரதிமீனா”பேருந்தில் நெல்லை கிளம்பவேண்டிய சூழல். பட்டீஸ்வரம் போகும்வழியில் இடப்புறத்தில் மிகப்பழமையான கோபுரம் தெரிந்தது.

அப்போதே அக்கோவிலைத் தரிசிக்க மனம் உறுதிகொண்டது. 

பட்டீஸ்வரம் போனோம்,துர்கையைத் தரிசித்தோம்,ஞானவாவியைக் கண்டு வியந்தோம்.மீண்டும் சிற்றுந்துப் பயணம். ஐந்து நிமிடத்தில் தாராசுரம் வந்தது.

இறங்கித் தேநீர்க்கடையில் தேநீர் அருந்தியபடி தூரத்தில் தெரிந்த தாராபுரம் கோவிலைப் பார்த்தோம்.”முன்பெல்லாம் மூன்று போகம் விளைந்த மண் இப்போது ரியல்எஸ்டேட்டால் நாசமாகிப்போனது..நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் அந்தக்கோவில் பனிரெண்டாம் நூற்றாண்டுக்கோவில் சோழமன்னன் இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்டது.”என்று தேநீர்க்கடை பாய் சொன்னபோது வியப்பாய் இருந்தது.

பழமையான அந்தக் கோவிலைத் தொல்பொருள் ஆய்வுத்துறை மிகப்பரந்த புல்வெளியோடு மிக அழகாய் பராமரித்து வருகிறது.

  ஐராவதேஸ்வரர் கோயில் என்ற பெயரில் 85 அடி உயர்ந்த ராஜகோபுரத்தோடு கம்பீரமாய் நின்றது.வாசல் நந்தி உருட்டிப்பார்க்கும் கல்லுருண்டைகளோடு உயிர்த்துடிப்போடு இருந்தது.

பெருமாள் கோவில் கற்கண்டாய் அந்தக்கணம் இனித்தது.செம்பரிதி தன் கதிர்களை வீசி ஐராவதேஸ்வரர் கோயில் சிற்பங்களை இன்னும் செறிவாக்கிக் கொண்டிருந்தது.படிகள் வழியே உள்நுழைகிறோம்.மிகப்பெரிய பிரகாரம்..நுழைமுகத்தில் துல்லியமான ஆரக்கால்களோடு அழகான கல்சக்கரம். ஐராவதம் என்பது இந்திரனின் யானை. துர்வாச முனிவரின் சாபத்தினால் தன்னுடைய நிறத்தை இழந்த ஐராவதம், இங்கு வந்து சிவனை வழிபட்டு, சாப விமோச்சனம் பெற்றதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதனால், இந்த கோவிலுக்கு ஐராவதீஸ்வரர் கோயில்  என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.கோவிலுக்குள் நுழைகிறோம்.சக்கரங்கள் பூட்டப்பட்டுள்ள தேரை கல்குதிரை இழுத்துச் செல்வதைப் போன்ற சிற்பம் உயிர்த்துடிப்பாய் அமைக்கப்பட்டுள்ளது.மிகச்சிறிய பரப்பிலும் மிகஅழகான சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.அறுப்பத்து மூவர் சிலைகள் இக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ளன.ஒட்டக்கூத்தர் தக்கையாகப்பரணியை இக்கோவிலில் அரங்கேற்றியதாகக் கூறுகின்றனர்.இக்கோவிலைச் சுற்றி அகண்ட அகழி அமைந்துள்ளது..மழைக்காலங்களில் தண்ணீரில் இக்கோவில் மிதப்பதைப் போல திகழ்கிறது.திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவில் இசைத்தூண்களை நினைவுபடுத்தும் சப்தசுவர இசைப்படிகள் இசையுலகிற்கு நமை இட்டுச்செல்கின்றன.இயற்கைச் சீற்றத்தில் சிக்கிக் கோவிலின் மிகஉயர்ந்த கோபுரம் மொட்டையாய் நிற்பது பார்க்க வருத்தம் தருகிறது.முப்பத்திரண்டு ஆரக்கால்களோடு மிக நுட்பமாய் செதுக்கப்பட்டிக்ருக்கிறது கல்தேரின் சக்கரம்.இரண்டாம் ராசராசன் கற்களின் வழியே சொற்களை வடித்து இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறான்..

சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி












Thursday, June 12, 2014

தாமிரபரணி எனும் தொன்மைத் தொட்டில் ..முனைவர் ச .மகாதேவன்



ஆற்றுச்சமவெளிகளில்தான் நாகரிகங்கள் தோன்றின .தண் பொருநை நதியாய் பொதிகை மலையில் உருப் பெற்று ,நெல்வேலி முழுக்க ஓடி வற்றா வளம் சேர்க்கும் தாமிர பரணி நதியோரம் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பழமையான தண் பொருநை நாகரிகம் தோன்றியது .

வான் முட்டும் பொதிகை மலை,அதில் முகில் எட்டும் பாண தீர்த்தப் பே ருவி ,அணையை நிறைத்து ,பாபநாச மலையில் இருந்து கம்பீரமாய் இறங்குகிறாள் தாமிரபரணி எனும் தண்ணீர்த் தாய் . 

அம்பாசமுத்திரம் ,கல்லிடைக் குறிச்சி ,வழியே கம்பீரமாய் நடந்து வருகிறாள் தண் பொருநைத் தாய் .

குந்தியின் மகனே! மோட்சத்தை அடையக் கடுந்தவம் புரிந்த முனிவர்களின் ஆசிரமத்தில் இருந்த தாமிரபரணியின் பெருமையை உனக்கு நினைவுபடுத்துகிறேன்'என்று ஒரு முனிவர் தர்ம புத்திரனைப் பார்த்துத்  தாமிரபரணியின் பெருமையைச் சொல்கிறார் .கங்கைப் போல் புனித நதியாகத் தாமிரபரணி போற்றப் படுகிறது .

இறையனார் சிவபெருமானின் திருமணத்திற்காகத்  தென்புலம் தாழ்ந்து வடபுலம் உயர்ந்தபோது சமன் செய்ய அகத்திய மாமுனிவர் வந்த பாபநாசத்தலத்தில்தான்   தாமிரபரணி நதிக் கரையில் ஈசன் அவருக்கு தன் திருமணக் கோலத்தைக் காட்டியதாகப்   புராணச் செய்தி உள்ளது .
காளிதசருடைய ரகு வம்சம் எனும் காவியத்திலும் தாமிரபரணிகுறித்த பதிவு உள்ளது .


வட மொழியில் அமைந்த வான் மீகி இராமாயணத்தில் தாமிரபரணி நதி குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன .

பொதிகை மலையில் உருப் பெற்று வங்காள விரிகுடாக் கடலில் புன்னைக் காயல் எனும் இடத்தில் கடலோடு சங்கமமாகும் தாமிரபரணி நதியில் குற்றாலத்தில் உருப் பெற்று அருவியாய்  கொட்டித் தாமிர பரணியோடு இணையும் சிற்றாறும் கால்டுவெல் பாதிரியாரால் புகழப்பட்ட நதி  .இவ்விரண்டு நதியோடு வான் உலகிலிருந்து பாயும் சரஸ்வதி எனும் நதியும்  தாமிரபரணி நதிஉடன் கலக்கும் இடம் சீவலப்பேரி .திரிவேணி சங்கமமாய்  போற்றப்படும் சீவலப்பேரியை மையமாய் கொண்டு என்னயினாப் புலவர் எழுதிய முக்கூடற்  பள்ளு எனும் இலக்கியம் புகழ் பெற்றது .

முதல் ராஜராஜனுடைய 28 ஆம் கல்வெட்டுகள் 1013 வருடம் வெட்டப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுக்கள் காணுமிடமான சீவலப்பேரியை அடுத்த சிற்றாறு (சித்திரா நதி) கலக்கும் பகுதியில் தாமிரபரணி நதியை தன் பொருந்தம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ராஜ ராஜ சோழனின் மிக நீண்ட கல்வெட்டு தாமிர பரணிக் கரையில் உள்ள திருப் புடை மருதூர் ஆலயத்தில் உள்ளது 

கல்லிடைகுறிச்சிக்கு  மேற்கே கன்னடியன் அணைக்கு உள்ளே மணிமுத்தாறு நதி தாமிர பரணியோடு  கலக்கிறது. ராம நதியும், கடனா நதியுடன் சேர்ந்து அது கடனா நதியாக திருப்புடைமருதூரில்  கலக்கிறது

எதிரே ஒரு காலத்தில் வராக நதி வந்து சேர்ந்தது. . முற்காலத்தில் இந்த இரு நதிகளும் தாமிரபரணியில் சேர்ந்த காரணத்தால் இவ்விடம் முக்கூடல் எனப்படுகிறது.


சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் முற்பட்ட நாகரீகம் தாமிரபரணி ஆற்றுச் சமவெளி என்பதற்கான தரவுகள் தாமிரபரணிக் கரையோரக் கிராமமான ஆதிச்ச நல்லூரில் கிடைத்தன


திருநெல்வேலியிலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடம்தான் ஆதிச்ச நல்லூர் .
114 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய இடுகாடு .
தோண்டத் தோண்ட தமிழ் இனத்தின் தொன்மையும் புதைந்து கிடந்த உண்மையும் வெளியே வந்தன .

நான்கு அடிக்கு ஒருவர் வீதமாக இறந்த முதுமக்கள், ஈமத் தாழிகளில் அடக்கம் செய்யப்பட்டனர் .

 பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903-ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூர் மண்ணிலே தன் ஆய்வினைத் தொடங்கினார் .
அப்போது மண்வெட்டி, கொழு முத லியன கிடைத்தன
அருமையான தொல் பொருட்கள் வெளி நாடுகளுக்கு கொண்டு செல்லப் பட்டன .
“1905-ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறுத் துணை கண்காணிப்பாளர் அலெச்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித் துக் கொடுத்ததோடு அகழ்ந் தெடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம் பெறச் செய்தார். அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் - ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டு மல்ல, நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறிய முடிகிறது.” என்று ஆய்வாளர் சுகுமாரன் குறிப்பிடுகிறார் .

நூறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த பல பதிவுகளைத் தந்தது .

அங்கே கிடைத்த தாழிகளில்  இருந்த மண்பாண்ட எழுத்துக்கள் பிராமி லிபியினால் ஆனவை என்று சமீபகாலமாகக் கண்டறிந்துள்ளார்கள்.
நவதிருப்பதிகளையும் நவ கைலாயங்களையும் பெற்ற தாமிரபரணி நதிக்கரை தொன்மையின் தொட்டிலாகவும் திகழ்கிறது .


தாமிரபரணி எனும் தொன்மைத்  தொட்டில் 

சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் முற்பட்ட நாகரீகம் தாமிரபரணி ஆற்றுச் சமவெளி என்பதற்கான தரவுகள் தாமிரபரணிக் கரையோரக் கிராமமான ஆதிச்ச நல்லூரில் கிடைத்தன. 114 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய இடுகாடு .

தோண்டத் தோண்ட தமிழ் இனத்தின் தொன்மையும் புதைந்து கிடந்த உண்மையும் வெளியே வந்தன .
நான்கு அடிக்கு ஒருவர் வீதமாக இறந்த முதுமக்கள், ஈமத் தாழிகளில் அடக்கம் செய்யப்பட்டனர் .

 பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903-ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூர் மண்ணிலே தன் ஆய்வினைத் தொடங்கினார் .
அப்போது மண்வெட்டி, கொழு முத லியன கிடைத்தன
அருமையான தொல் பொருட்கள் வெளி நாடுகளுக்கு கொண்டு செல்லப் பட்டன .
நூறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த பல பதிவுகளைத் தந்தது .
அங்கே கிடைத்த தாழிகளில்  இருந்த மண்பாண்ட எழுத்துக்கள் பிராமி லிபியினால் ஆனவை என்று சமீபகாலமாகக் கண்டறிந்துள்ளார்கள்.
நவதிருப்பதிகளையும் நவ கைலாயங்களையும் பெற்ற தாமிரபரணி நதிக்கரை தொன்மையின் தொட்டிலாகவும் திகழ்கிறது .

தாமிரபரணி எனும் தொன்மைத்  தொட்டில் .அருமையான இந்த  நாகரீகத்தை உலகின் பார்வைக்குத் தெளிவாகக் கொண்டு செல்லும் முயற்சியை நாம் உடன் எடுத்தாக வேண்டும்.ஒரு சில காட்சிமாதிரிகளுடன் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் உள்ள
ஆதிச்சநல்லூர் அதிசயங்கள் தனிச் சிறப்பு பெற்றஅருங்காட்சியகமாக அந்த மண்ணில் உருவாக்கப் படவேண்டும்

திருநெல்வேலியிலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடம்தான் ஆதிச்ச நல்லூர் .






முனைவர் ச .மகாதேவன்
 ,தமிழ்த் துறைத் தலைவர் ,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,
திருநெல்வேலி -627 002
mahabarathi 1974@gmail.com